இறந்து இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன்..! அதிர்ச்சியில் குடும்பத்தினர்
அனுராதபுரம் - கொக்காவெவ பொலிஸ் பிரிவில் இறந்துவிட்டதாக கருதி இறுதி சடங்குகள் முதல் ஆத்மசாந்திக்கான தானங்கள் வரை செய்து முடிக்கப்பட்ட நபரொருவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவமொன்று குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், சுமார் 02 மாதங்களின் பின்னர் திடீரென உயிருடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியே சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் வராததால் அவரது மனைவி கொக்காவெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மீட்கப்பட்டுள்ள சடலம்
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஹபனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காப்பகப்பகுதியில் நஞ்சருந்தி உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புத்தாண்டிற்கு மகன் வாங்கிக்கொடுத்த ஆடைகளுடன் அச்சடலத்தின் ஆடைகள் ஒத்துப்போனமையினால், சடலம் தனது கணவருடையது என எண்ணி மனைவி மற்றும் உறவினர்கள் தவறாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, ஆகஸ்ட் 31 ஆம் திகதி பொலன்னறுவையில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் தான சடங்குகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் விசாரணை
இவ்வாறான பின்னணியில், குறித்த நபர் திடீரென தனது சகோதரியின் வீட்டை சென்றடைந்துள்ளார்.
இதன்போது அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக இது குறித்து கொக்காவெவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், அடக்கம் செய்யப்பட்ட சடலம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.