கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது
கொழும்புக்கு அண்மித்த நுகேகொட பிரதேசத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
'திலங்க' என்ற புனைப்பெயர் கொண்ட அந்த சந்தேக நபரிடமிருந்து சுமார் ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
போதைப்பொருளைக் கடத்துவதற்காக சந்தேக நபரால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சந்தேக நபரிடமிருந்து அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சரக்கின் சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பிலியந்தலாலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், தற்போது வெளிநாட்டில் இருந்தபடி போதைப்பொருள் வர்த்தகம் செய்துவரும் அலுத்கம பிரதேசத்தைச்சேர்ந்த அஸாம் முகமது என்பவரின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் விநியோகிப்பாளராக செயற்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் வழக்கு ஆவணங்களையும் கடுவெல நீதிமன்றத்தில் முற்படுத்திய பின்னர், தடுப்புக் காவல் உத்தரவு பெற்று மேலதிக விசாரணைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.