வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உடனடியாக நாடு கடத்தல்
கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கைக்குள் நுழைய முயன்ற சீனப் பிரஜை ஒருவர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு சைபர் மோசடி நிறுவனத்தில் பணிபுரிந்த சீன பிரஜை கைது செய்யப்பட்ட நிலையில் உடனடியாக நாடு கடத்தப்பட்டுள்ளார்.
அவர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து எயார் ஏசியா விமானம் AK-045 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
குறித்த சீன நாட்டவர், சுற்றுலா விசா வகையை சேர்ந்த வணிகப் பிரிவின் கீழ் இலங்கையில் செயற்படும் நிறுவனத்தில் பணிபுரிய வருவதாக கட்டுநாயக்க குடிவரவு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். எனினும் அவர் வகித்த பதவி குறித்த தெளிவான மற்றும் குறிப்பிட்ட தகவலை வழங்க தவறியுள்ளார்.
குடிவரவு அதிகாரிகள்
அதற்கமைய, குறித்த சீன நாட்டவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் தலைமை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
நாடு கடத்தல்
பிலிப்பைன்ஸின் பரானாக் பகுதியில் உள்ள ஒரு கணினி மோசடி மையத்தில் அவர் பணி புரிந்ததையும், அந்த மையம் பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் படையினரால் சோதனை செய்யப்பட்டதையும், அதன் காட்சிகள் நாட்டின் பாதுகாப்புப் படையினரால் யூடியூப் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தமையை குடிவரவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவு அதிகாரிகள், இந்த சீன நாட்டவரை, அவர் வந்த அதே விமானத்தில் நாடு கடத்துவதற்காக எயார் ஆசியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.



