இலங்கையிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் காலத்தை நீடித்தது மலேசியா!
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் காலத்தை 21 நாட்களாக மலேசியா நீடித்துள்ளது.
இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு மலேசியா தனிமைப்படுத்தல் காலத்தை 21 நாட்களாக நீடித்துள்ளது.
அந்நாட்டு ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்போதைய 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து இது கூடுதல் ஏழு நாட்கள் ஆகும்.
எவ்வாறாயினும், தனிமைப்படுத்த காலம் முழுவதும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையம் ஒன்றில் தங்கியிருக்க வேண்டும் என அந்நாட்டு மூத்த அமைச்சர் டத்துக் செரி இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள மலேசியர்கள் மற்றும் இந்திய குடிமக்கள் அல்லாத பயணிகளுக்கு 21 நாள் தனிமைப்படுத்தல் காலம் அமுலில் இருக்கின்றது.
பயணிகள் மலேசியாவுக்கு புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பி.சி.ஆர் சோதனை செய்ய வேண்டும் என்றும், அதன் முடிவுகளில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே விமானத்தில் ஏற முடியும்.
அனைத்து பயணிகளும் மலேசியாவின் சர்வதேச நுழைவு பகுதிக்கு வந்ததும் பி.சி.ஆர் சோதனை செய்ய வேண்டும். அனைத்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலம் 10 நாட்களில் இருந்து 14 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும், தேவையிருந்தால் “14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்படும். இது 14 வது நாளில் மேற்கொள்ளப்படும் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் அமையும்” என செரி இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.