நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (Video)
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த ஹர்த்தாலுக்கு பல தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை வழங்கியுள்ளன.
இதனால் நாட்டின் பல பகுதிகளில் பாடசாலைகள் வெறிச்சோடியுள்ளதுடன், பெரும்பாலான கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.
அத்துடன் பொதுப் போக்குவரத்தும் பகுதியளவில் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகள் முடங்கியுள்ளன.
களுவாஞ்சிகுடி
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி நகர்பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும், பொதுச்சந்தை தனியார் மற்றும், அரச வங்கிகள் அனைத்தும் முற்றாக பூட்டப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
எனினும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதனால் வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
செய்தி வ.சக்திவேல்
யாழ்ப்பாணம்
ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில் இன்றைய தினம் யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு நகரம் முற்றாக முடங்கியுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் வடமராட்சியில் பருத்தித்துறை, மந்திகை, நெல்லியடி, போன்ற நகர் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
கிளிநொச்சி
நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்டபோதும் கிளிநொச்சியில் ஓரளவு சாதாரண நிலையை அவதானிக்க முடித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகள், கிளிநொச்சி சேவைச் சந்தை மற்றும் தபால் நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளது.
இதேவேளை நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று திறக்கப்பட்டுள்ளதுடன் அரச, தனியார் பேருந்து சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்
சுமார் 3000 தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும் ஹர்த்தால் கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மக்களும் பூரண ஆதரவு வழங்கியுள்ளனர்.
இன்று (6) அதிகாலை தொடக்கம் மன்னார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதுடன் தனியார் பேருந்து சேவைகளும் இயங்கவில்லை.
அதே நேரம் பொது இடங்களில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளது.
பாடசாலைகள் வழமை போல் இயங்கிய போதிலும் மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளதுடன் பாடசாலை வருகை பதிவேட்டில் கையொப்பம் இடுவதையும் தவிர்த்துள்ளனர்.
மன்னார் மாவட்டம் முழுவதும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்பட்ட போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் தொடர்ச்சியாக பொதுமக்கள் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
இன்றைய தினம் மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன், அரச பாடசாலைகள், அலுவலகங்கள் போன்றவைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
வவுனியா
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் மாணவர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைகள் பல வெறிச்சோடியுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நாடாளாவிய ரீதியில் 2000 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
அதன்படி நாடு பூராகவும் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்கள் பலரும் பாடசாலைக்கு சமூகமளிக்காததுடன், மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை என்பதால் பாடசாலைகள் வெறிச் சோடிக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் இன்று பூரண கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் உள்ள வர்த்தக நிலையங்கள்,
மொத்த மரக்கறி விற்பனையகம், தபாலகம், வங்கிகள், அனைத்தும் மூடப்பட்டு மக்கள்
அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், தனியார் பேருந்து சேவை, முச்சக்கரவண்டிகள் என்பனவும் சேவையில் ஈடுபடாமையால் போக்குவரத்து சேவையும் பாதிப்படைந்துள்ளது. இருப்பினும் வீதிகளில் மக்களின் நடமாட்டத்தைக் குறைந்தளவில் அவதானிக்க முடிகிறது.
செய்தி - திலீபன், சதீஸ்
மலையகம்
பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசாங்கத்தினை வெளியேறக் கோரியும் ஆயிரம் தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக இன்று மலையகப்பகுதிகளில் அனைத்து சேவைகளும் இடம்பெறவில்லை. இதனால் நகரங்கள் தோட்டங்கள் மயான அமைதி நிலவுகிறது.
பொது போக்குவரத்து மற்றும் பாடசாலை சேவைகள் இடம்பெறாததன் காரணமாகவும்,பாடசாலைகளில் அதிபர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியதன் காரணமாக மலையகப் பகுதியில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முற்றாகச் செயலிழந்தன.
தபால், வங்கி, புகையிரத சேவைகள் ஆகியனவும் இடம்பெறவில்லை.தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் பூட்டப்பட்டிருந்தன. மலையக நகரங்களில் உள்ள அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்பட்டிருந்தன.
வாகன போக்குவரத்து இல்லாததன் காரணமாகவும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததன் காரணமாகவும் நகரங்களில் சனநடமாற்றமும் மிகக் குறைவாகவே காணப்பட்டன. பெரும்பாலான நகரங்கள் வெறிச்சோடி போய் கிடந்தன.
ஹட்டன் பகுதியில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை எனினும் ஒரு சில தனியார் பேருந்துகளும் இலங்கை போக்குவரத்து சேவைக்குச் சொந்தமான பேருந்துகளும் சேவையில் ஈட்டுப்பட்டிருந்தன.
செய்தி - திருமால்
கொழும்பு
அரசாங்கத்திற்கு எதிராகக் கொழும்பில் இன்று பூரண கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், அதற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பின் பல பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள், மொத்த மரக்கறி விற்பனையகம், தபாலகம், வங்கிகள், அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகிறன.
திருகோணமலை
திருகோணமலையிலும் பூரண ஹர்த்தால் காரணமாக நகர்ப்பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு சில இடங்களில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
கிண்ணியாவில் ஹர்த்தால் காரணமாகக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
அனைத்துப்பாடசாலைகளும் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், அரச மற்றும் தனியார் பேருந்துகள் எதுவும் சேவையில் ஈடுபடவில்லை.
இதேவேளை திருகோணமலை நகரம் மூன்றாம் கட்டை , மட்கோ,அபயபுர போன்ற பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் திருகோணமலை மாவட்ட அரச சேவை உத்தியோகத்தர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்ட நடைபவனி 04ம் கட்டை பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்தை சென்றடைந்தது.
அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
செய்தி - அப்துல் யாசீம்
[

பதினாறாவது மே பதினெட்டு 7 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
