இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்தில் ஈழப் போர் தொடர்பில் பாரிய தவறுகள்
இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்தின் ஆறாவது தொகுதியில் (1978 முதல் 2010 வரையிலான காலப்பகுதி) பாரிய வரலாற்றுத் திரிபுகள் இடம்பெற்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மகாவம்சத்தை வெளியிடும் குழுவால் தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய தொகுதியில், குறிப்பாக ஈழப் போர் தொடர்பான விடயங்களில் கடுமையான தவறுகள் உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
பாரிய தவறுகள்
1990 ஜூலை 10 அன்று கொக்குவில் இராணுவ முகாமின் மீது விடுதலைப்புலிகள் அமைப்பினர் நடத்திய தாக்குதல் பற்றிய குறிப்பில், லெப்டினன்ட் அலதெனிய ஒரு பீரங்கியை (Cannon) எடுத்துக்கொண்டு தொலைக்காட்சி கோபுரத்தில் ஏறி பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீரங்கி என்பது ஒரு வீரர் கோபுரத்தில் எடுத்துச் செல்ல முடியாத ஒரு கனரக ஆயுதம் ஆகும்.
இத்தகைய பாரதூரமான தகவல் திரிபு இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், எல்.டி.டி.ஈ கண்டி தலதா மாளிகைத் தாக்குதலை நடத்திய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலதா மாளிகைத் தாக்குதல்
உண்மையில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரே தலதா மாளிகைத் தாக்குதல் நடந்தது.
இந்தநிலையில்,ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அனுருத்த பிரதீப் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உத்தியோகபூர்வ குழுவால் இத்தகைய பிழைகள் ஏற்படுவது ஆச்சரியமளிக்கிறது என்றும், வரலாற்றைத் திரிபுபடுத்துவது பாரதூரமானது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து வினவியபோது, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க பதிலளிக்கையில், "வரலாறு மிகச் சரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஒருவேளை தவறு நடந்திருந்தால், தொகுப்புக் குழுவுடன் பேசி உடனடியாகச் சரி செய்யப்படும்" என்று உறுதியளித்துள்ளார்.
வரலாற்று ஆவணங்களில் இத்தகைய திரிபுகள் சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்பதால், இந்தப் பிழைகளை அரசாங்கம் உடனடியாக மீளாய்வு செய்து சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.




