விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பு! பிரதான போதைப்பொருள் முகவர்கள் கைது
ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி சென்ற 3 சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை - கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (07.10.2022) அதிகாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை - கல்முனை பிரதான வீதி மல்வத்தை பிள்ளையார் கோவில் அருகில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
இவ்வாறு கைதான நபர்கள் அம்பாறை நகர் பகுதியை சேர்ந்த 33, 37, 38 வயது மதிக்கத்தக்கவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சந்தேக நபர்கள் பயணம் செய்த கருப்பு நிற கொரோல்லா கார் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் 06 கிராம் 840 மில்லிகிராம், தொகுதி பணம் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் சான்று பொருட்களுடன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மற்றுமொரு நபர் கைது
இதேவேளை அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (7.10.2022) அதிகாலை மற்றுமொரு நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை மதிரஸா வீதியில் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான நபர் கல்முனைகுடி பகுதியை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்கவர்
என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 7 கிராம் 870
மில்லி கிராம் உள்ளிட்ட சந்தேக நபர் பயன்படுத்திய கைத்தொலைபேசி என்பன விசேட
அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிரதான முகவர்கள்
கைது செய்யப்பட்ட நபர், சான்று பொருட்களுடன் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு தரப்பினரும் குறித்த பிராந்தியத்தில் போதைப்பொருள் விற்பனையின்
பிரதான முகவர்களாக செயற்பட்டு வந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.








