மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் விபத்து
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள் மடத்தில் நேற்று (09.02.2025) நண்பகல் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மகிழுந்து (கார்) ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக இதனை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து பொலிஸார் விசாரணை
இவ்விபத்துச் சம்பவத்தில் எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.
எனினும் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விபத்துக்குள்ளான இரு வாகனங்களையும் மீட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


