ஹட்டன் பகுதியில் பாரிய விபத்து - சாரதி வைத்தியசாலையில்..
கொட்டகலை - கொமர்சல் பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இன்று (13.04.2026) மாலை சுமார் 2.50 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
திம்புல்ல - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கும் இடையில், பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி கடும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதி படுகாயம்
மேபீல்ட் பகுதியில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்த சிறிய ரக தனியார் பேருந்து ஒன்று, கொட்டகலை பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்திற்கான காரணமாக பேருந்தின் தடை இயங்காத நிலை இருந்திருக்கலாம் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல்ல - பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.