ஹோர்முஸ் நீரிணையில் வீசப்பட்ட கண்ணிவெடிகள்: அவசர அவசரமாக செயற்பட்டதால் சிக்கல் - திணரும் இராணுவம்
ஹோர்முஸ் நீரிணை கடல் பகுதியில் வீசப்பட்ட கண்ணிவெடிகளை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற சில வெளிநாடுகளின் கப்பல்கள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தின.
பொருத்தப்பட்ட கண்ணிவெடிகள்
மேலும் அவ்வழியாக கப்பல்கள் செல்வதைத் தடுக்க சிறிய படகுகள் மூலம் ஈரானின் புரட்சிகர காவல் படையினர் கண்ணிவெடிகளை பொருத்தினர்.
இவ்வாறான சூழலில் போரை உடன் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து 2 வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் பொருத்திய கண்ணிவெடிகளை கண்டறிய அந்நாட்டு படைகளால் முடியவில்லை எனவும், அவை கடலின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிணையை முழுமையாக திறப்பதில் சிக்கல்
ஹோர்முஸ் நீரிணை கடல்பகுதியில், கண்ணிவெடிகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதை கண்டுபிடிக்க முடியாததால் நீரிணையை முழுமையாக திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
கடலுக்கு மேலே மிதந்த கண்ணிவெடிகளை ஈரான் இராணுவம் அகற்றியது. கடலுக்கு சில நூறு அடி ஆழத்தில் எங்கெல்லாம் கண்ணிவெடிகள் வீசப்பட்டன என்பது குறித்து தெளிவான விவரங்கள் இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நிலக்கரி தட்டுப்பாட்டு நட்டத்தை மக்கள் மீது சுமத்தவே முடியாது! பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு திட்டவட்டமான அறிவிப்பு
திட்டமிடப்பட்ட இராணுவ வரை படத்தின்படி நடக்காமல், அவசர அவசரமாகச் செய்யப்பட்டதால், எந்தெந்த இடங்களில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளன என்பதற்கான துல்லியமான தரவுகள் ஈரானிடம் இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக சிக்கல் நிலை நீடிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.