மகிந்த ராஜபக்ச பயணித்த வாகனம் மீது விழுந்த தடுப்பு படலை: பொலிஸ் விசாரணை தீவிரம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் குருநாகல் - யக்கஹாபிட்டிய வெளியேறும் வீதியினை கடந்து செல்லும் போது பாதுகாப்பு முனையத்தில் உள்ள தடுப்பு படலை வாகனம் மீது விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அனுராதபுரம் நோக்கி நேற்று (28.11.2023) மகிந்த ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
பொலிஸ் மோட்டார் சைக்கிள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் வெளியேறும் வாயிலைக் கடந்தவுடன் மகிந்த ராஜபக்சவின் வாகனம் செல்லும்போது தடுப்பு படலையை(Gate) ஊழியர் இறக்கிய சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஊழியரை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நெடுஞ்சாலைகளில் உள்ள பாதுகாப்பு தடவைகளில் பணியாற்றும் சில ஊழியர்களின் கவனக்குறைவால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |