மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது.. வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியராச்சி நேற்றைய தினம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து நெவில் வன்னியாராச்சியை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டவிரோதமாக, வருமானத்திற்கு அதிகமாக 28 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களை குவித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
விசாரணைக்கு ஒத்துழைப்பு
கடடந்த 2016ஆம் ஆண்டு முதல் இவ்விடயத்தில் விசாரணை தொடர்பாக நெவில் வன்னியாராச்சியிடம் தகவல் கோரப்பட்ட போதிலும், அவர் தொடர்ந்து தகவல்களை வழங்கத் தவறிவிட்டார் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நெவில் வன்னியாராச்சி நீண்டகாலமாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதையும், சொத்துக்கள் தொடர்பான ஐந்து வழக்குகளில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையும், உத்தரவுகளுக்கு அவர் தொடர்ந்து கீழ்ப்படியாததையும் கருத்தில் கொண்டு, அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் நெவில் வன்னியாராச்சி சட்டவிரோதமாக ஈட்டியதாக கூறப்படும் சொத்து தொடர்பில், விரைவில் நாட்களில் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் நீதிவான் அறிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை நெவில் வன்னியராச்சி வழங்கவில்லை என்றும், எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் விசாரணையிலிருந்து பலமுறை தப்பித்து வந்ததாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பல்வேறு சொத்துக்கள்..
அதேவேளை, சந்தேக நபரான நெவில் வன்னியராச்சிக்கு வலஸ்முல்லவில் 3.7 ஏக்கர் நிலம், ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் பல்லேகலையில் ரூபா 4.5 மில்லியன் மதிப்புள்ள ஒரு வீடும் உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அது மாத்திரமன்றி, மஹரகம, நாவின்னவில் 125 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடும், தெமட்டகொடயில் 15 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடும் உள்ளது. சந்தேக நபர் திஸ்ஸமஹாராமவில் 45.5 பேர்ச்சஸில் ஒரு விடுதியைக் கட்டி வருவதுடன் 10 பேருந்துகள், 8 பாரஊர்திகளும், 32 வங்கிகளிலும், 47 நிதி நிறுவனங்களிலும், வைப்புகளும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மடிவெல, கோட்டேயில் நான்கு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலமும், பெலியத்த மற்றும் வீரகெட்டிய பகுதிகளில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு கடைகளும் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது தெரிவித்துள்ளது.
பிழையான தகவல்
முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், டிசம்பர் 2016 முதல் ஜனவரி 2017 வரை சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வழங்குமாறு ஆணைக்குழு சந்தேக நபருக்கு அறிவித்துள்ளது.
அதன்படி, ஏழு மாதங்களுக்குப் பின்னர் அவரால் வழங்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்ததில், அது உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளில் வருமானம் மற்றும் செலவு பதிவுகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், 2025 ஒகஸ்ட் வரை முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை. 2013.01.01 முதல் 2014.1.24 வரை சந்தேக நபர் தனது வருமானத்தை விட 28 மில்லியன் ரூபா அதிகமாக சம்பாதித்ததாக ஆணைக்குழு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீண்டகாலத்திற்குப் பின்னர் தகவல் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், விசாரணையில் தகவல் தவறானது மற்றும் முழுமையற்றது என்பது தெரியவந்துள்ளது.
வாக்குமூலம்
சந்தேக நபரிடம் மீண்டும் ஒரு பிரமாணப் பத்திரம் வழங்குமாறு கேட்கப்பட்ட போதிலும், சந்தேக நபர் தகவலை வழங்கத் தவறியதால் 26.09.2025 அன்று வருமாறு கேட்கப்பட்டிருந்த போதிலும், சந்தேக நபர் மீண்டும் ஒரு வாக்குமூலம் அளிக்க அவகாசம் கோரியுள்ளார்.
விசாரணைக்கு உதவுவதற்குப் பதிலாக, சந்தேக நபர் எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து அவகாசம் கேட்டு வருகிறார். அதன்படி, ஆணைக்குழு அதிகாரிகள் குழு ஒன்று அத்தநாயக்க, மெதமுலானாவில் உள்ள சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்ற போது, சந்தேக நபர் அங்கு இல்லை. சந்தேக நபரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் தொலைபேசி துண்டிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கட்டத்தில், தொலைபேசி இயக்கப்பட்டது, மேலும் சந்தேக நபர் அழைப்பு இணைக்கப்பட்ட 52 வினாடிகளுக்குள் மற்றொரு திகதியைக் கோரினார். அதன்படி, நேற்று வருமாறு அவருக்கு ஒரு கடிதம் வழங்கப்பட்டது. சந்தேக நபரிடம் 2014 முதல் அவர் வெளியிடாத பல சொத்துக்கள் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



