சுட்டுக் கொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் நினைவேந்தல்(Photos)
கொழும்பில் 2008 ஆம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் 16ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ். வட்டுக்கோட்டையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில், இன்றையதினம்(01.01.2024) ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் விஜிமருதன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இறைவழிபாடுகள் இடம்பெற்று தேவாரம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈகைச் சுடரேற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
கொலைக்கான பொறுப்பு
அத்துடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மதகுருக்கள், கட்சியின் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
2008 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி எதிர்க் கட்சி அரசியல்வாதி தியாகராஜா மகேஸ்வரன் மத்திய கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் வைத்து கொல்லப்பட்டார்.
அரசாங்கமும் கொலைக்கான பொறுப்பை தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது சுமத்த முயற்சித்த போதிலும், இந்தக் கொலையில் ஆயுதப் படைகளுடன் சம்பந்தப்பட்ட தமிழ் துணைப்படைக் குழுக்களின் நடவடிக்கைக்குரிய ஆதாரம் உள்ளது என விசாரணைகளில் தெரியவந்தது.
நேரடியாகக் கண்ட சாட்சிகளின்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமார் காலை 10 மணியளவில் இந்து கோவிலில் பிரார்த்தனைக்காக வருகை தந்திருந்த போதே அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார் என கூறப்பட்டது.
காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
பொலிஸாரின் ஆதாரங்கள்
ஏனைய 12 பேருடன் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் காயமடைந்ததோடு மற்றுமொருவர், கொல்லப்பட்டார்.
அப்போதைய பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா, இந்தப் படுகொலை விடுதலைப்புலிகளின் செயலே என்பதை ஒப்புவிக்க "தக்க ஆதாரங்கள்" இருந்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
சந்தேக நபர் புலிகளுடன் தொடர்புடையவர் என்பதையும் அவர் குருநகரில் இருந்து வந்தார் என்பதையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இரு நாட்களுக்குள், குருநகரில் உள்ள சந்தேக நபரின் பெற்றோர் உட்பட 12 பேரை பொலிஸ் கைதுசெய்தனர்.
எனினும் பொலிஸாரின் கூற்றுக்களை ஒப்புவிக்கும் ஆதாரங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் கொலைப் படைகளால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்ற கருத்துக்கள் அக்காலத்தில் தமிழர் தரப்புகளால் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கில் ஆதாரங்களின் பதிவுகள் அப்போதைய அரசாங்கப் பேச்சாளர் கெஹலியே ரம்புக்வெல்ல முன்வைத்த வாதங்களால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
துப்பாக்கிதாரி மைக்ரோ கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியிருப்பதாலும் அத்தகைய ஆயுதங்களை புலிகளே பயன்படுத்தி வருவதாலும் இந்தக் கொலையில் புலிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என அவர் வலியுறுத்தினார்.
வற் வரி தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த கலந்துரையாடல்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய
விடுதலைப்புலிகள் மறுப்பு
இந்தக் கொலைக்கு பொறுப்பேற்க மறுத்து புலிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டதோடு "தமிழரின் குரலை அடக்குவதற்காக" மகேஸ்வரனைக் கொலைசெய்துவிட்டதாக இராணுவத்தின் மீதும் அரசாங்கத்தின் மீதும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
மகேஸ்வரனை புலிகள் படுகொலை செய்தார்கள் என்பதற்கு தெளிவான காரணங்கள் இல்லாத அதே வேளை, இராஜபக்ச அரசாங்கத்துடன் கூட்டணி சேர்ந்திருக்கும் கட்சிகளில் ஒன்றுக்கு ஒரு தெளிவான நோக்கமாக இது அமைந்திருக்கலாம் என நோக்கப்பட்டிருந்தது.
வரவுசெலவுத் திட்டத்தின் பின்னர் நாடாளுமன்றத்தில் பேசிய மகேஸ்வரன், யாழ்ப்பாணக் குடாநாட்டில் துணைப்படை குழுவொன்றால் கப்பம் பெறுவதற்காக கடத்தல்கள் மேற்கொள்வது சம்பந்தமான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக அறிவித்தார்.
2007 டிசம்பர் 30ஆம் திகதி தனியார் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியில் பேட்டியளித்த போது, நாடாளுமன்றம் 8ஆம் திகதி மீண்டும் கூடும் போது அந்த விபரங்களை அங்கு வெளியிடுவதாக தெரிவித்தார்.
மறு நாள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ்ப்பாணக் குடாநாட்டில் இளைஞர்களைக் கொல்வதற்காக கொழும்பில் இருந்து குண்டர்களைக் கொண்டுவந்து பயன்படுத்துகிறது என மகேஸ்வரன் தனியார் இணையத்திற்குத் தெரிவித்திருந்தார்.
மகேஸ்வரனை கொன்றதாக கூறப்படும் கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் முன்னால் உத்தியோகத்தர் ஆவார்.
அவர் முன்னர் மகேஸ்வரனின் பாதுகாப்பு குழுவில் கடமையாற்றியிருந்ததோடு அதற்கு முன்னர் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு குழுவிலும் கடமையாற்றியுள்ளார் என அறியப்பட்டது.
மனித உரிமை விசாரணை
ஜனவரி 2ஆம் திகதி பி.பி.சி. யின் சிங்கள சேவைக்கு பேட்டியளித்த அரசாங்க பேச்சாளர் ரம்புக்வெல்ல, கொலையாளி அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் உத்தியோகத்தராக இருந்ததாகவும் தேவானந்தாவுக்காக சேவையாற்றியதாகவும் உறுதிப்படுத்தினார்.
2005 நத்தாரின் போது, மட்டக்களப்பில் நள்ளிரவு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நவம்பர் 2006இல், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் பட்டப்பகலில் கொல்லப்பட்டார்.
இந்த இரு கொலைகள் தொடர்பாகவும் விசாரணை நடத்த அரசாங்கம் ஆணைக்குழுக்களை நியமித்ததோடு ஜனாதிபதிக்கு அறிக்கைகள் வழங்கப்பட்ட போதிலும், எதுவும் பிரசுரிக்கப்படவோ அல்லது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவோ இல்லை.
இலங்கையிலும் மற்றும் அனைத்துலகிலும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் இதனை எதிர்த்த போதிலும், உத்தியோகபூர்வ விசாரணைகள் ஏறத்தாழ கைதுகளை முன்னெடுக்கவோ அல்லது குற்றச்சாட்டுக்களை சுமத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |