குழப்பமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசாங்கம்! கேள்வியெழுப்பியுள்ள எதிர்க்கட்சி தலைவர்
சிறைச்சாலை அமைப்பை சரியாக நிர்வகிக்க முடியாத தற்போதைய அரசால், 22 மில்லியன் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதே இன்று கேள்விகுறியாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
திணறும் அரசாங்கம்
"நடமாடும் நூலகம் என்று அழைக்கப்படும் அறிஞர்கள் நிறைந்த அரசை உருவாக்குவதாகக் கூறிய தற்போதைய அரசு, வெளிநாட்டுக் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்த முடியாமலும், சிறைச்சாலைகளைக் கட்டுப்படுத்த முடியாமலும் திணறுகின்றது.

இவ்வாறானதொரு அரசால் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும்? கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசு ஆதரவாக வாக்களித்தது.
இருப்பினும், சில நாட்களுக்குப் பின் மீண்டும் மஹர சிறைச்சாலையில் மோதல் வெடித்துள்ளது.
நிலவும் குழப்பமான சூழ்நிலை
நீதி அமைச்சரைப் பாதுகாத்த அரசாங்கம், தற்போது அங்கே நிலவும் குழப்பமான சூழ்நிலையைச் சரிசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஒரு சிறைச்சாலையைக் கூடக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத இந்த அரசால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. மாறாக, நாட்டை அழிக்கும் ஓர் அரசே தற்போது செயற்படுகின்றது.
இன்று நாட்டின் 30 முதல் 40 சதவீத மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ளதுடன், நகர்ப்புற, கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்த சமூகமும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன என்றார்.