மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறவுள்ள நிலையில், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இந்தச் சந்திப்புகளின்போது, டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு குறித்து அவர் விளக்கமளித்தார்.
மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் புனித நகரத்தின் மறுசீரமைப்பிற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டம் குறித்தும் அவர் விளக்கினார்.
மறுசீரமைப்புப் பணி
தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெற்றுக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பிற்குத் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் சந்தோஷ் ஜா வெளிப்படுத்தினார்.
இதற்கிடையில், டிட்வா சூறாவளி ஏற்பட்டு ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

"மீண்டெழும் வலிமையின் ஓராண்டு – ஒற்றுமையின் பிணைப்பு" என்ற தொனிப்பொருளில் வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்தியில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இலங்கை மக்கள் வெளிப்படுத்திய துணிச்சலும் மீண்டெழும் மனவலிமையும் பாராட்டப்பட்டுள்ளன.
மேலும், இலங்கையின் மீட்சி மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் உறுதியான பங்காளியாக இந்தியா தொடர்ந்து இலங்கையுடன் கைகோர்த்து நிற்கும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீண்டும் உறுதியளித்துள்ளது.