தமிழ் மக்களின் நினைவேந்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணிலின் நிலைப்பாடு வெளியானது
இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு, நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழருக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் நாள் நினைவேந்தல் தென்னிலங்கை அரசியலில் சர்ச்சையாக மாறியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அரசியல் தீர்வு
அவர் சிங்கள ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவிக்கையில், மீண்டுமொரு ஆயுதப் போரை தமிழர்களோ, சிங்களவர்களோ அல்லது முஸ்லிம்களோ விரும்பவில்லை.
எனினும், கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆயுதப் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் அமைதியாக நினைவேந்த அனுமதி வழங்கப்பட வேண்டும்.
இதை எவரும் இனவாத ரீதியில் அல்லது அரசியல் ரீதியில் பார்க்கக்கூடாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் இதைத்தான் விரும்புகின்றார்கள்.
எனவே, தீர்வை நாம் விரைவில் வழங்க வேண்டும். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும்போதும் இதனைக் குறிப்பிட்டுள்ளேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.