நினைவேந்தலில் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு தடை : எச்சரிக்கும் அரசாங்கம்
நினைவேந்தல் நிகழ்வில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது பிறந்த தினத்தை அனுஷ்டிக்க இடமளிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை கல்வி முறையில் மாற்றம் : புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மாவீரர் நினேவேந்தல் நிகழ்வன்று 11 பேர் கைது செய்யப்பட்டனர். மூன்று நீதிமன்றங்கள் நினைவேந்தலுக்கு தடை விதித்துள்ளன. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை.
பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டின் சட்டம்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று கொடிகளை ஏந்திக் கொண்டு சென்றவர்கள் முரன்பாடான விதத்தில் செயற்பட்டுள்ளார்கள். படங்களில் தெளிவாக தெரிகிறது. அதன் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
நினைவேந்தல் நிகழ்வில் பிரபாகரனின் உருவத்திலான கேக், டீசர்ட் மற்றும் புலி கொடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு இடமளிக்க முடியாது.
தமிழ் பிரதிநிதிகள் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை பேசுகிறார்கள். அவ்வாறாயின் அவர்கள் இவ்வாறான தடை செய்யப்பட்ட விடயங்களுக்கு இடமளிக்க கூடாது. அவர்களும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்.
பொன்னம்பலம் உட்பட தமிழ் பிரதிநிதிகள் பொலிசாரை தமிழர்கள் புறக்கணிப்பதாக குறிப்பிடுகிறார்கள் ஆனால் அவர்களின் பாதுகாப்புக்கு பொலிசாரை கேட்கிறார்கள். இதுவே உண்மை. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெற்றாலும் கைதுகள் இடம்பெறும்.
பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டின் சட்டம் அது செயற்படுத்தப்படும். முறையற்ற செயற்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று தமிழர்களிடம் குறிப்பிடுங்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்தவர்களை பொலிஸ் காவலில் வைக்கவில்லை. கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள்.
நீதிமன்றத்தின் உத்தரவுடன் தான் அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே அவர்களை விடுவிப்பது, பிணை வழங்குவதை நீதிமன்றமே தீர்மானிக்கும். நாங்கள் தீர்மானிக்க முடியாது. முரண்பாடுகளை ஏற்படுத்தாமல் நாட்டின் சட்டத்துக்கு அமைய செயற்படுங்கள் அதுவே நல்லிணக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |