மன்னாரில் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி அனுஷ்டிப்பு
புதிய இணைப்பு
மாவீரர் தினத்தை முன்னிட்டு, மன்னார் - விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் நினைவஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இதன்போது, பங்குத்தந்தை அருட்பணி ஜெஸ்மன் றாச் அடிகளாரினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியை தொடர்ந்து, உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு பவனியாக ஆலயத்தில் நுழைந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, ஆலய முற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழீழக் கோலத்தின் நடுவே பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவு அஞ்சலி நிகழ்வில், விடத்தல்தீவு பங்கில் பணியாற்றும் அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் உணர்வுபூர்வமாக பங்கேற்று உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மன்னார் - மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) மாலை மாவீரர் தின நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
மாலை 6.5 மணியளவில் மாவீரர் ஒருவரின் தந்தையால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், மத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி, ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

குறித்த மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு மாவீரர் தின நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், முன்னாள் போராளிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்து மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.


