தமிழர் நாட்காட்டியில் மிக முக்கிய தினமான மாவீரர் நாள்! அவுஸ்திரேலியாவில் ஒலித்த குரல்..
மாவீரர் நாள் என்பது தமிழர்களின் நாட்காட்டியில் மிக முக்கியமானதொரு தினமாகும் என அவுஸ்திரேலிய செனெட் உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை (25) அவுஸ்திரேலிய செனெட் சபையில் உரையாற்றியபோதே டேவிட் ஷுபிரிட்ஜ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் நாள்
தமிழர்களின் தியாகங்களைத் தாம் அங்கீகரிப்பதாகவும், கடந்தகாலம் குறித்து நேர்மையாகப் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

'மாவீரர் நாள்' என்பது தமிழர்களின் நாற்காட்டியில் மிகமுக்கியமானதொரு தினமாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், உலகவாழ் தமிழர்கள் யுத்தத்தில் உயிரிழந்தோரை 27 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு நினைவுகூர்வதானது ஒருமைப்பாட்டின் மிகவலுவானதொரு அடையாளமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று அவுஸ்திரேலியாவிலும், ஏனைய உலக நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் தான் உடன்நிற்பதாகவும் டேவிட் ஷுபிரிட்ஜ் தெரிவித்துள்ளார்.
'நான் இப்போது இந்த வார்த்தைகளை அவுஸ்திரேலிய செனெட் சபையில் கூறுகின்றேன்.
இந்தத் தினத்தை நினைவுகூருவதற்காக ஒன்றுபட்டிருக்கும் நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட அவுஸ்திரேலியவாழ் தமிழர்களே, உங்களது தியாகங்களை நாம் அங்கீகரிக்கின்றோம். கடந்த காலம் தொடர்பில் நேர்மையாகப் பேசுவதுடன் அமைதியையும், ஒருமைப்பாட்டையும் அடைந்துகொள்வதற்கு ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருக்கின்றோம்' எனவும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.