வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் தாழமுக்கம்! வட மேற்கு திசை நோக்கி செல்லும் புயல்..
நேற்றையதினம் (27.11.2025 )வியாழக்கிழமை இரவு 10.00 மணி டிட்வா புயலானது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
நிலவும் வானிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புயலின் மையப்பகுதி
இது தற்போது மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் இடைப்பட்ட மகா ஓயா பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு வட மேற்கு திசையில் நகரும். தற்போதைய நிலையில் இந்த புயலின் மையப்பகுதி முழுவதும் நிலத்தின் ஊடாகவே நகரும் வாய்ப்புள்ளது.

ஆனாலும் நகர்வுப் பாதை இன்னமும் இறுதியாகவில்லை. இந்த புயலின் மையம், மற்றும் உள்வளையம் ஆகியன வடக்கு மாகாணத்தின் முழுப் பகுதியையும் உள்ளடக்கியே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தற்போதைய நகர்வின் படி எதிர்வரும் 02.12. 2025 அன்று வட தமிழகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது புயலின் மையம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் உள்ளமையால் இப்பகுதிகளில் ஒரு அசாதாரண அமைதி நிலவும். ஆனால் அது நிலையானதல்ல. இந்த புயலினால் நாடு முழுவதற்கும் எதிர்வரும் 29.11.2025 வரை மிகக் கனமழை கிடைக்கும்.
அம்பாறைக்கு இன்று பிற்பகல் முதல் படிப்படியாக மழை குறையும். ஆனாலும் எதிர்வரும் 30.11.2025 வரை மழை கிடைக்கும். மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எதிர்வரும் 29.11.2025 முதல் மழை படிப்படியாக குறைவடையும்.
ஆனால் திருகோணமலை மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் மிகக் கனமழை கிடைக்கும். வவுனியா மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் மிகக் கனமழை கிடைக்கும்.
கன மழை
எதிர்வரும் 01.12.2025 அன்றும் வவுனியாவின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்றும் நாளையும், தினமும் மிகக் கனமழை கிடைக்கும்.
எதிர்வரும் 01 மற்றும் 02.12.2025 அன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலைமைகளின் படி மன்னார் மாவட்டத்துக்கு இன்று முதல் எதிர்வரும் 01.12.2025 வரை மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அத்தோடு அனுராதபுரத்தில் கிடைக்கும் கனமழையும் குளங்களின் வான் பாயும் நீரும் ஏற்கனவே குறிப்பிட்டபடி அருவியாற்றின் முகத்துவாரம் மற்றும் கீழ் நீரேந்து பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும். கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் படிப்படியாக நேற்று இரவு முதல் கனமழை முதல் மிகக்கனமழையை எதிர்கொள்ளும். இது எதிர்வரும் 02.12.2025 வரை தொடரும்.
இன்னும் சிறிது நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் கன மழை கிடைக்க தொடங்கும். தற்போது திருகோணமலை மற்றும் வடக்கு மாகாணத்தில் காற்று மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் வீசுகின்றது.
இது இன்று இன்னமும் அதிகரிக்கும். இன்றும் தென், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு மிகக் கனமழை கிடைக்கும். ஆனால் இனறு மறுநாள் பிற்பகல் முதல் மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்றில் முதல் முறை
மத்திய மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு இன்றும்(28) நாளையும்(29) கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும். ஆனால் எதிர்வரும் 30.11.2025 முதல் மேல மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்தில் மழை குறைவடையும்.
இந்த புயலின் நகர்வுப்பாதை இதுவரை இல்லாதது போன்று அமையும் என தோன்றுகின்றது. இது அசாதாரணமானது. வட மாகாணம் முழுவதையும் உள்ளடக்கிய வடக்கு நோக்கிய நகர்வு முற்றிலும் புதியது.

1867ம் ஆண்டு இலங்கையில் முதல் முதலாக நில அளவைத் திணைக்களத்தின் கீழ் விஞ்ஞான முறைகளிலான வானிலை அவதானிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை இது போன்ற நகர்வுப் பாதையை எந்த புயலோ, தாழமுக்கமோ கொண்டிருந்ததில்லை. வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
அன்புக்குரிய உறவுகளே.... தயவு செய்து அனர்த்த அவசர எச்சரிக்கைகளைப் புறந்தள்ள வேண்டாம். இது ஒரு முழு அளவிலான புயல் என்பதனை மறக்க வேண்டாம். ஆனால் மிகவும் அவதானமாகவும், போதுமான தயார்ப்படுத்தலோடும் இருந்தால் இதனை நாம் சுலபமாக வெற்றி கொள்ளலாம் என்பதனையும் நினைவில் கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri