அனர்த்தத்தின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.. சுமந்திரன் தெரிவிப்பு
வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பகுதியில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், "அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால் தான் நிவாரணப்பணிகளும் சரியான முறையில் நடைபெறும்.
மலையகத்திற்கு விஜயம் செய்த போது பல பரிதாபகரமான சம்பங்கள் தொடர்பில் அறிந்துகொண்டோம். சில இடத்தில் முழு கிராமமுமே புதையுண்ட நிலை காணப்படுகின்றது.
கட்சி பேதங்கள்
அந்தநேரத்தில் வீடுகளில் இல்லாத சிலர் தப்பி பிழைத்துள்ளனர்.அங்கிருந்த ஒருவர் தனது முழுக்குடும்பமுமே புதையுண்டுள்ளதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு யாரும் வரவில்லை, மூன்று நாட்களாக எப்படியாவது தமதுகுடும்பத்தினரின் உடல்களை மீட்கவேண்டும் என போராடிவருவதாக தெரிவித்தார்.

அங்கு சிலர் தமது பணத்தினைக்கொடுத்து டீசல் ,இயந்திரங்களை எடுத்து தேடும் பணிகளை முன்னெடுத்திருந்தனர். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நிவாரண பணிகளில் அனைவரும் கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அரசாங்கமும் சொல்கின்றது நாங்களும் கூறுகின்றோம்.
அனைவரும் கூறுகின்றார்கள்.ஆனால் இந்த விடயங்களில் ஏனைய கட்சிகளை புறந்தள்ளிவைப்பதில் அரசாங்கம் மும்முரமாக செயற்படுவது வெளிப்படையாக தெரிகின்றது.
நேற்றை தினம் கண்டி அரசாங்க அதிபரை சந்தித்தபோது கம்பளை பகுதியில் 19 பேர்தான் உயிரிழந்துள்ளதாக சொல்கின்றார்.நாங்கள் சென்ற முதல் இடத்திலேயே 26 உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் 50க்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டுள்ளதாக கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு பல கிராமங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது.அந்த பகுதிகளில் மக்கள் சென்று மீள வாழமுடியாத வகையில் அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |