பிரபாகரன் யார் கையிலும் சிக்கியதில்லை! கே.பி என்னை தொலைபேசியில் அழைத்தார் - உண்மையை உடைக்கும் காசி ஆனந்தன்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உடலைப் போல ஒரு போலியான உடலைக் காட்டி பிரபாகரன் மறைந்துவிட்டார் என்ற செய்தியை இலங்கை அரசாங்கம் பரப்பியது என தமிழீழத்தின் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
உமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பிரபாகரன் இறந்துவிட்டார் என்று இலங்கை அரசாங்கம் காண்பித்த படம் தொலைக்காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த நேரத்தில் மலேசியாவில் இருந்து கேபி எனக்கு தொலைபேசி எடுக்கின்றார். அதுவரையில் எந்தக்காலமும் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டதில்லை.
அப்போது எனக்கு அழைத்த கேபி சொல்கின்றார், “அண்ணண், தலைவர் பிரபாகரன் மறைந்து விட்டார், இந்தச் செய்தியை சொல்லுகிற தகுதியும் பொறுப்பும் உங்களுக்குத் தான் இருக்கின்றது. உங்கள் மூலமாகத்தான் இந்த செய்தியை நாங்கள் உலகுக்கு சொல்ல விரும்புகின்றோம். உடனடியாக இந்தச் செய்தியை உலகத்திற்கு அறிவியுங்கள்” என்று சொன்னார்.
அதனைக் கேட்டதும், எனக்கு கோபம் கோபமாக வந்தது. காலம் முழுவதும் தலைவர் வாழ்க.. தலைவர் வாழ்க.. என்று கவிதை எழுதிக்கொண்டிருந்த நான் அந்த செய்தியைக் கேட்டதும் எரிந்து போனேன். உடனே தொலைபேசியை வைத்துவிடு என நான் கேபியை கூறினேன்.
என்னுடைய, கருத்தின்படி, இறுதிக் கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நூற்றுக்கணக்கான போராளிகள் இருந்தனர். இணைந்து செயற்பட்டனர். அப்படியிருக்கையில் எந்தவொரு போராளியும் கூறவில்லை, நாங்கள் தலைவர் பிரபாகரனின் உடலை காணவில்லை, அவர் இறந்து விட்டார் என்று.
இலங்கை அரசாங்கம் மாத்திரமே கூறிக் கொண்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.