நாட்டை தரமிறக்கும் ரணிலின் முயற்சி தோல்வி! உலக வங்கியிடம் மீண்டும் கோரிக்கை
குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்ற வகுதியில் இருந்து குறைந்த வருமானம் கொண்ட நாடு என்ற வகுதிக்கு ஒரு நாடு செல்லவேண்டுமானால், அதற்கு அனுமதியை கோரலாம் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒக்டோபர் முதல் வாரத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் கடன்கள் கோரப்பட்டதாகக் கூறியிருந்தார்.
பின்னர் ஒக்டோபர் 10 ஆம் திகதியன்று அவரின் அமைச்சரவை, குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்பதிலிருந்து, குறைந்த வருமானம் கொண்ட நாடு என்று நாடு என்று இலங்கையை வகைப்படுத்த ஒப்புதலை வழங்கியது.
குறைந்த நடுத்தர வருமான நாடு
இருப்பினும் சில மணித்தியாலங்களில், ஜனாதிபதி அறிக்கையொன்றில், தற்போதைய குறைந்த நடுத்தர வருமான நாடு என்ற நிலை தொடரும் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில்,பொருளாதார நிபுணரான உமேஷ் மொரமுதலி, நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்று உலக வங்கி வழங்கிய அந்தஸ்தை அரசாங்கம் மாற்ற முடியாது, ஆனால் மாற்றத்தை கோரலாம் என்று கூறியுள்ளார்.
இது அமைச்சரவையின் தவறான தகவல் பரிமாற்றம் என்று மொரமுதலி தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தியா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் உட்பட 53 நாடுகளுடன் நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே இன்னும் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கி
இந்தநிலையில் சந்தை நிபந்தனைகளின் அடிப்படையில் கடன் வாங்குவதற்கான கடன் தகுதியின்மை மற்றும் சலுகை நிதி தேவை ஆகியவற்றின் அடிப்படையில் அரசாங்கம், உலக வங்கியிடம் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கை தற்போது பரிசீலனையில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டின் கடன் தகுதியைக் கருத்தில் கொண்டு உலக வங்கி கடன்களை வழங்குகிறது. எனினும் இந்த கடன்கள் வழங்கப்பட்டால், செயல்பாட்டின் இறுதி செயல்திறன் அளவீடு தரவைப் பெற, திட்டத்தின் முன்னேற்றம், விளைவுகள் மற்றும் பயனாளிகள் மீதான தாக்கம் ஆகியவை முழுவதும் கண்காணிக்கப்படுகின்றன.
பின்னர், இறுதி முடிவுகள் எதிர்பார்த்த முடிவுகளுடன் ஒப்பிடப்படுகின்றன. உலக வங்கி தனிநபர் மொத்த தேசிய வருமானத்தைப் பொறுத்து நாடுகளை பல்வேறு வருமானக் குழுக்களாக வகைப்படுத்துகிறது.
ஃபிரான்டியர் ரிசர்ச்சின் மேக்ரோ பொருளாதார மற்றும் கருப்பொருள் ஆய்வாளரான சாயு தம்சிங்க என்பவரின் கருத்துப்படி, இலங்;கை தற்போது தனிநபர் தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் நாடாகத் தாழ்த்தப்படுவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கியின் தரப்படுத்தல்
குறைந்த வருமானம் கொண்ட நாடு என்ற நிலைக்குத் தள்ளப்பட, இலங்கையின் தனிநபர் வருமானம் 1,085 அமெரிக்க டொலர்களாகக் குறைய வேண்டும், இது எதிர்காலத்தில் சாத்தியமற்றது.
அதேநேரம் இலங்கையை தரமிறக்கினால், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து மக்கள் பட்டினியால் வாட நேரிடும் என்று சாயு தம்சிங்க தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் தரப்படுத்தல்படி, குறைந்த வருமானம் கொண்ட நாட்டின் தனிநபர் வருமானம் 1085 டொலர்கள்.
குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாட்டின் தனிநபர் வருமானம் 1086 டொலர்கள் முதல் 4255 டொலர்கள்.
உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாட்டின் தனிநபர் வருமானம்- 4256 டொலர்கள் முதல் 13,225 டொலர்கள்.
உயர் வருமானம் கொண்ட நாடுகளின் தனிநபர் வருமானம்-13,205 டொலர்கள் மற்றும்
அதற்கு மேலான வருமானம் ஆகும்.