20 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் - நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது.
அது இன்று மாலையளவில் முல்லைத்தீவுக் கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத் தொகுதி நாளையளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவிழக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அதற்கிணங்க, நாட்டின் வானிலையில் இத் தொகுதியின் தாக்கம் நாளையளவில் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 - 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

முதலாம் இணைப்பு
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 7 மணிக்கு திருகோணமலைக்கு வடக்காக ஏறத்தாழ 60 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இத்தொகுதி வலுவிழக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் இன்று (10.01.2026) நண்பகலளவில் திருகோணமலைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று வீசும் சாத்தியம்
வட மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்டுகின்றது.
வடமேல் மாகாணத்திலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்.. தீவிரமடையும் காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை




