குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு : கட்டாயமாக்கப்படும் நடைமுறை
அஸ்வெசும நிவாரணத்திட்டத்துக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது. எனவே முதற்கட்ட நிவாரணத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் இம்முறை விண்ணப்பிக்க முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் சமூகப் பாதுகாப்பு கருத்திட்டத்தின் பிரதித் திட்ட பணிப்பாளர் எஸ்.யூ.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இம்முறை விண்ணப்பிக்கும் ஒருவரின் அடையாள அட்டை இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நலன்புரி நன்மைகள் சபையினால் முன்னெடுக்கப்படும் அஸ்வெசும நிவாரணத்திட்டத்துக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரப்படவுள்ள நிலையில் இது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் போதிய தெளிவின்மை தொடர்ந்தும் காணப்படுகின்றது.
இந்த நிவாரணத்திட்டத்தின் கீழ் 24 இலட்சம் பயனாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் இலக்கு. அதனடிப்படையில் முதற்கட்ட நிவாரணத்துக்காக 35 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. இதில் முதற்கட்டமாக 14 இலட்சம் பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நிவாரணங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம் 5 இலட்சம் பேரின் மேன்முறையீடுகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குமாறு சிபாரிசு செய்யப்பட்டுள்ள அதேவேளை எஞ்சிய ஒரு இலட்சம் பேரின் மேன்முறையீடுகள் தொடர்பான மீள்பரிசீலனை எதிர்வரும் வாரங்களில் நிறைவு செய்யப்படும்.
அடையாள அட்டை இலக்கம்
எனவே தமது விபரங்கள் ஏற்கனவே தரவு சேகரிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
துரதிஷ்டவசமாக முதற்கட்டத்தின்போது விண்ணப்பிக்க தவறியவர்களும் விண்ணப்பித்தபோதிலும் எண்ணீட்டாளர்களால் தரவுகள் சரிபார்த்த பின்னர், வழங்கப்படும் கியூ.ஆர் குறியீடு கிடைக்கப்பெறாதவர்களும் மாத்திரமே இம்முறை விண்ணப்பிக்க முடியும்.
சில பகுதிகளில் சமுர்த்தி கொடுப்பனவு பெறுபவர்கள் விண்ணப்பிக்கவில்லை. எனவே, இம்முறை சமுர்த்தி பயனாளி ஒருவர் தான் இந்த நிவாரணத்தை பெறுவதற்கு தகுதியுடையவர் என்றால் அவரும் விண்ணப்பிக்க முடியும்.
ஆனால் இம்முறை விண்ணப்பதாரர்களின் அடையாள அட்டை இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட சகலரும் தமது அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனவே அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |