ஐரோப்பிய நாடுகளில் அரசாங்கங்களுக்கு எதிராக வீதிக்கு இறங்கும் விவசாயிகள்
பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இலட்சக்கணக்கான விவசாயிகள் நெடுஞ்சாலைகளை மறித்து, தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்குமாறு அந்நாடுகளின் அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் உயரும் பணவீக்கத்தைச் சமாளிக்கவும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் சந்தைப்படுத்தலுக்கு எதிராகவும், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவக் கோரி, பாரிஸ் உட்பட, பிரான்ஸ் முழுவதும் நெடுஞ்சாலைகளை பிரெஞ்சு விவசாயிகள் திரளாகத் தடுத்துள்ளனர்.
பல நாடுகளில் எதிரொலி
நெடுஞ்சாலைகளில் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பல்பொருள் சந்தைகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க டிராக்டர்களை பயன்படுத்தியுள்ளனர்.
பிரான்ஸ் தவிர, ஜேர்மனி, போலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் விவசாயிகளும் உரிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பின்னணியிலேயே அண்மையில் உலக புகழ்பெற்ற மொனாலிசா ஓவியம் மீது சூப்பை ஊற்றி, "எது முக்கியம்... கலையா அல்லது ஆரோக்கியமான, நிலைத்தன்மையுடன் உணவுப் பொருள்களை உண்பதற்கான உரிமையா? பிரெஞ்சு விவசாயம் பொய்த்துப்போய் விட்டது. ஆரோக்கியமான, நல்ல திடமான நிலையான உணவு எங்களுக்கு வேண்டும்" என இருவர் போராடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |