இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக பாரிய நட்டம்! நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம்
யாழ். நெடுந்தீவு கடல் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் மூன்று நாட்களில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக இரண்டு கோடியே 49 லட்சத்து 79 ஆயிரம் ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாக நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பகுதியில் 689இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலாகக் கடல் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம், 18ஆம், 21ஆம் திகதிகளில் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளின் தொழில் நடவடிக்கைகளால் 174 கடற் தொழிலாளர்கள் தங்களுடைய கடற்றொழில் உபகரணங்களை இழந்துள்ளனர்.
குறிப்பாகப் பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்களை இழந்துள்ளனர்.
இதன் மொத்த மதிப்பீடு 2 கோடியே 49 லட்சத்து 79 ஆயிரம் ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்திய இழுவைப் படகுகளின் எல்லை தாண்டிய தொழில் நடவடிக்கைகளால் தமது தொழில்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும், உயிர் ஆபத்துக்களைக் கூட எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள இப்பிரதேச கடல் தொழிலாளர்கள் தற்போது தொழில் உபகரணங்களை இழந்துள்ள நிலையில் நாளாந்தம் கூலி வேலைகளுக்காகச் செல்கின்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்களின் சமாசத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 01ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு தொழிலாளர்களுடைய பாதிப்பு தொடர்பில் உரையாற்றுகையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புரவி புயல் காரணமாகவும், நெடுந்தீவு பிரதேசத்தில் கடல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரவி புயல் காரணமாக 10 படகுகள் முழுமையாகச் சேதமடைந்ததுடன் 68 படகுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.
மூன்று வலைகள் முழுமையாகவும் மூன்று வலைகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.
வெளியிணைப்பு இயந்திரம் ஒன்று முழுமையாகவும் மூன்று இயந்திரங்கள் பகுதியளவிலும் ஒருநாள் படகுகள் இரண்டு படகுகள் சேதம் அடைந்துள்ளது.
ஆறு படகுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில் 84 வலைகள் முழுமையாகச் சேதம் அடைந்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொழிலாளர்கள் தங்களுடைய தொழில் உபகரணங்களை இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் இழந்து தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
