முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த திடீர் மரணம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்.
லொஹான் ரத்வத்த தனது 57ஆவது வயதில் காலமானார்.
தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்றைய தினம் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களின் பின்னணியில் லொஹான்
லொஹான் ரத்வத்த முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டி திரித்துவ கல்லூரியின் பழைய மாணவரான லொஹான், ஒர் பிரபல ரக்பி வீரராகும்.
லொஹான் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் நெருங்கிய உறவினராகவும் அறியப்படுகின்றார்.
கடந்த 2009ஆம் ஆண்டு மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி மாகாணசபை உறுப்பினராக தெரிவாகியிருந்தார்.
பின்னர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியினார். பின்னர் 2015 மற்றும் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களிலும் அவர் வெற்றியீட்டியிருந்தார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சராகவும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சராகவும் லொஹான் ரத்வத்த கடமையாற்றியிருந்தார்.
கடந்த 2001ஆம் ஆண்டு உடதலவின்ன பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் லொஹான் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021ஆம் ஆண்டில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை மிரட்டியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் லொஹான் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.




