மன்னாரில் மூன்றாவது நாளாகவும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள்
நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முழுமையாக முடங்கியுள்ள போதிலும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் சென்று வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் நகரில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்காகவும், கர்ப்பிணிகள், வயோதிபர்கள், சிறுவர்களுக்கான கிளினிக் செல்வதற்கும் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக அனுமதி வழங்கியுள்ளனர்.
இதேவேளை மன்னார் நகர பேருந்து நிலையத்தை தூய்மையாக்கி கிருமி நீக்கும் நடவடிக்கைகளை மன்னார் நகர சபையினர் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
