உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மகிந்த தேசப்பிரியவின் முக்கிய அறிவிப்பு
2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய(Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களினால் எந்தவொரு நன்மையும் இல்லை.
இழக்கப்படும் வாய்ப்பு
ஏனெனில் குறித்த வேட்பு மனுக்கள் 2022 ஆம் ஆம் ஆண்டில் கோராப்பட்டவை. தற்போது 2 வருடங்கள் முற்றாக கடந்துள்ளது. எனவே பழைய வேட்பு மனுக்களின் ஊடாக உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் போது இளம் பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்பு இழக்கப்படுகின்றது.
2023 தேர்தல் சட்டவிதிமுறைகளின் பிரகாரம் வேட்புமனுக்களில் 35 வயதுக்கு குறைந்த இளம்பிரதிநிதித்துவம் நூற்றுக்கு 25 வீதமாக காணப்பட வேண்டும் என்ற யோசனை திட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் இந்த முறைமை பின்பற்றப்பட்டது. எனவே பழைய வேட்புமனு இரத்து செய்யப்பட்டு புதிய வேட்புமனு கோரப்பட்டு எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.