நல்லாட்சி காலத்தில் மலையகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்
இந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஊடாக எமது கட்சி எழுச்சிபெற்று,வீறுநடை போடும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளரும், சமூக சேவையாளருமான சதாநந்தன் திருமுருகன் தெரிவித்துள்ளார்.
கட்சி ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்
கூறுகையில்,
“எமது மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களாகின்றன. காடாக
காட்சியளித்த இந்த மலையக மண்ணில் பசுமை புரட்சி செய்துள்ளனர்.
மலையகத்தில் மாற்றம்
வீதி அமைப்பு உட்பட மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்தனர். இதற்காக பலர் தமது உயிர்களைக்கூட தியாகம் செய்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தையே தோளில் சுமந்தனர். இன்றளவிலும் சுமந்துவருகின்றனர். நாட்டுக்காக முன்கள போராளிகள்போல் பாடுபட்டுவரும் மலையக மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.
ஆனால் எமது பெருந்தோட்ட மக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். அவர்களின் வாழ்க்கைத்தரம் என்பது இன்னும் மேம்படவில்லை.
சிறார்கள் மத்தியில் போசாக்கிண்மை பிரச்சினையும் நீடிக்கின்றது. இனியும் இந்நிலைமை நீடிக்க இடமளிக்க முடியாது. எனவேதான் மாற்றமொன்றை ஏற்படுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஊடாக நான் அரசியல் களம் புகுந்துள்ளேன்.
பல சமூக சேவைகளை செய்து, கல்வி புரட்சிமூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்திவருகின்றேன். அதனை அடுத்தக்கட்டம் நோக்கி கொண்டுசெல்லவே அரசியலுக்குள் வந்தேன்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எமது பிரதிநிதிகள் நுவரெலியா மாவட்டத்தில் கை சின்னத்தில் களமிறங்குகின்றனர். மலையக மக்களுக்கு நிச்சயம் நாம் கை கொடுப்போம்.
சுதந்திரக்கட்சி வீறுநடை போடும்
எமது கட்சி சின்னம்கூட கைதான். எமது கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த நல்லாட்சி காலத்தில்தான் மலையகத்தில் தனிவீட்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட்டது. சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன.
இப்படி
மக்கள் துயர் அறிந்த அவர் நிச்சயம் மலையக மக்களை கைவிடமாட்டார். நாமும்
அவருடன் இணைந்து மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
விழுந்தாலும் மீண்டெழக்கூடிய அரசியல் தந்திரம், மந்திரத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நன்கு கற்றே வைத்துள்ளது.
குறிப்பாக 1965 இல் நடைபெற்ற தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த சுதந்திரக்கட்சி 1970 இல் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
இந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஊடாக எமது கட்சி எழுச்சி பெற்று,வீறுநடை போடும்.”என தெரிவித்துள்ளார்.



