அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி: நாட்டில் எரிவாயு விலை குறையும் சாத்தியம் உள்ளதாக தகவல்
தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு வருடத்திற்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன்படி தாய்லாந்தின் சியாம் கேஸ் என்ற நிறுவனமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரு ஆண்டுகளில் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனமானது மெட்ரிக் தொன் ஒன்றுக்கு அறவிட்ட தொகையை விட 9 டொலர் குறைவாக புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற முடியும்.
கடந்த 2 ஆண்டுகளாக, ஓமானில் இருந்து நாட்டுக்கு எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எனினும், குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதற்கமைய அடுத்த மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக விலைமனு கோரப்பட்டிருந்ததாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நிறுவனத்திடமிருந்து 9 டொலர் குறைவாக எரிவாயுவை பெற முடியும் என்பதால் நாட்டில் எரிவாயு விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்ய புதிய நிறுவனம் தெரிவு! லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு
