ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் முஹம்மர் கடாபியின் புதல்வர்
லிபியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அந்நாட்டின் முதலாவது நேரடியான ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட, லிபியாவின் முன்னாள் ஆட்சித் தலைவர் முஹம்மர் அல் கடாபியின் (Muammar al Gaddafi ) புதல்வர் பதிவு செய்துள்ளார்.
கடந்த காலத்தில் தனது தந்தையின் வாரிசாக இருந்த சைஃப் அல் - இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi), 2011 ஆம் ஆண்டு லிபியாவில் ஏற்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான புரட்சியை கொடூரமாக அடக்கும் கொள்கைக்கு ஆதரவளித்தார்.
இதனால், அவரது புகழுக்கு பங்கம் ஏற்பட்டது. எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள லிபிய ஜனாதிபதித் தேர்தல், சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தலாக இருக்காது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தும் அல்லது முடிவுகளை மாற்ற முயற்சிக்கும் நபர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தடைகளை எதிர்நோக்க நேரிடும் என உலக வல்லரசுகளும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தனது தந்தையின் மரணத்திற்கு பின்னர், சைஃப் அல் - இஸ்லாம், ஆறு ஆண்டுகள் இராணுவத்தின் பொறுப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் பின்னர் அந்த தீர்ப்பு மாற்றப்பட்டது.
சைஃப் அல் -இஸ்லாம், போர் குற்றம் சம்பந்தமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தேடப்படும் நபராக இருந்தாலும் படிப்படியாக அவர் மீண்டும் பகிரங்க மேடைக்கு வர தன்னை தயார்ப்படுத்திக்கொண்டார்.