கிறிஸ்மஸ் தீவிலுள்ள தமிழ் குடும்பத்தின் விடுதலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
கிறிஸ்மஸ் தீவில் குடும்பத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக்கையாளரான பிரியா, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என எல்லைப் பாதுகாப்புதுறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள பிரியா குடும்பம் இதற்கெதிராக தமது சட்டப்போராட்டத்தை தொடர்கின்ற நிலையில், பிரியா அவரது கணவர் நடேஸ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளான கோபிகா, தருணிகா ஆகியோர் கடந்த பல மாதங்களாக கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தனது தங்குமிடத்திற்கு வந்த காவலாளி ஒருவர் அறை வாசலில் நின்றவாறு ஒருவித இச்சையுடன் பார்த்ததாகவும், அவரது நோக்கம் பாலியல் ரீதியாக தன்னை அணுகுவதாக இருக்கலாம் என்பதை உணர்ந்தவுடன் பாதுகாப்பு கருதி உடனடியாக அவரைத் தாண்டி அறைக்கு வெளியே தான் சென்றுவிட்டதாகவும் பிரியா தெரிவித்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் காவலாளி நிர்வாகத்திற்கு முறையிட்டதையடுத்து குறித்த காவலாளி அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும் ஆனால் பிரியா தொடர்ந்தும் தனது பாதுகாப்பு தொடர்பில் அச்சத்துடன் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரியா குடும்பத்தை நேரில் சென்று சந்தித்தபோது இச்சம்பவத்தை பிரியா தன்னிடம் தெரிவித்ததாக லேபர் கட்சியின் உள்துறை விவகாரங்களுக்கான பேச்சாளர் Kristina Kenneally செனட் விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார்.
இதற்குப் பதிலளித்த எல்லைப் பாதுகாப்புதுறை ஆணையர் Michael Outram,
இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடு எதுவும் மேற்கொள்ளப்பட்டதாக தனக்குத் தகவல் கிடைக்கவில்லை எனவும், இது ஒரு புதிய செய்தியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இப்படியாக ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால் தடுப்புமுகாம் பாதுகாப்புக்கென கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா- நடேஸ் தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோரது தடுப்புமுகாம் வாழ்க்கை கடந்த மார்ச் மாதத்துடன் மூன்று ஆண்டுகளை எட்டியிருந்தது.
பிரியா, நடேஸ் மற்றும் கோபிகா ஆகியோரது அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் முழுக்குடும்பமும் நாடு கடத்தலிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,பிரியா குடும்பத்தின் தற்போதைய வாழ்க்கைச் சூழல் தொடர்பில் இம்மாத ஆரம்பத்தில் புதிய உள்துறை அமைச்சர் Karen Andrews ஆலோசனை பெற்றுள்ள பின்னணியில் இவர்கள் விரைவில் கிறிஸ்மஸ் தீவிலேயே சமூகத்தில் வாழ அனுமதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.