தமிழர்களின் காணிகள் விடுவிப்பு: அநுர ஆட்சியில் நடக்கும் அதிரடி நடவடிக்கைகள்
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கிலே கூடுதலான காணிகளை நாங்கள் விடுவித்து இருக்கின்றோம் என பிரபு எம்.பி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாலையடிவட்டை இராணுவ முகாம் அமைந்துள்ள காணி விடுவிப்பது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காணிகள் விடுவிப்பு நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள பாலையடிவட்டை கிராமத்தில் அமைந்திருந்த இராணுவ முகாமை பகுதியளவில் விடுவிப்பதற்கு இதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடமிருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில், அந்த இராணுவ முகாமை முழுமையாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாலையடிவட்டை இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி, அப்பகுதி மக்களின் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிலப்பரப்பாக இருப்பதால், அந்த முகாமை விடுவிக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்ததன் அடிப்படையில், ஜனாதிபதி இந்த முகாமை விடுவிப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளார்.
அதேபோல், சம்பந்தப்பட்ட பிரதி அமைச்சரும் இதற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
இராணுவ முகாமை முழுமையாக விடுவிக்க கோரிக்கை
இந்த நிலையில், பாலையடிவட்டை இராணுவ முகாமை முழுமையாக விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மாத இறுதிக்குள் முகாமை முழுமையாக விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த காணியை முதற்கட்டமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளரிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த காணி மத்திய நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமானதாக இருப்பதால், அந்த திணைக்களம் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை முன்வைக்கும் பட்சத்தில் காணியை அவர்களிடம் கையளிக்கவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் நீர் தொடர்பான பிரச்சினைகள் நீண்டகாலமாக நிலவி வருகின்றன. அதனால் நீர்ப்பாசன தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த காணியை நீர்ப்பாசன திணைக்களத்திடம் ஒப்படைப்பது அவர்களின் பணிகளை விரைவாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri