என் உயிருக்கு ஆபத்து! காணொளி வெளியிட்ட பின் மாயமான விளையாட்டு வீரர்: தொடரும் மர்மம்
பர்மிங்காமைச் சேர்ந்த ரக்பி மற்றும் எக்ஸ் ஃபேக்டர் நட்சத்திரமான லெவி டேவிஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போயுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் அவர் காணாமல் போவதற்கு சற்று முன்பு சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருப்பினும் சிறிது நேரத்தில் அந்த காணொளி சமூக ஊடகங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அதனால் லெவியைத் தவிர வேறு யாரோ அவரது கணக்குகளை அணுகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருந்தது.
மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள காணொளி
இந்நிலையில் குறித்த பிரித்தானிய ரக்பி விளையாட்டு வீரர் வெளியிட்ட காணொளி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த காணொளியில் ஒரு குற்றச் செயலில் ஈடுபடும் கும்பல் தன்னையும், தன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாகக் கூறி மிரட்டுவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் காணாமல் போன மூன்று மாதங்களுக்கு பின்னர் அந்த காணொளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது இருப்பிடம் இன்னும் தெரியவில்லை.
தனியார் புலனாய்வாளர் கவின் பர்ரோஸின் மூலம் பெறப்பட்ட கறுப்பு மற்றும் வெள்ளை காணொளியில், லெவி நேராக கமராவை உற்றுப் பார்த்து பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணொளியில் வௌியிட்ட தகவல்
அதில், 'ஹலோ, என் பெயர் லெவி டேவிஸ், என் உயிருக்கு ஆபத்து உள்ளது.நான் சொல்வதைக் கேட்டு புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தினால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்னை மிரட்டுபவர்கள் குறித்து டேவிஸ் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததாகவும், ஆனால் அதிகாரிகள் அவருக்கு உதவ மறுத்துவிட்டதாகவும் கவின் பர்ரோஸின் குற்றம்சாட்டியுள்ளார்.
கடைசியாக அவர் காணாமல் போன நாளில், மதுக்கடையை விட்டு வெளியேறுவது பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் டேவிஸ் பார்சிலோனா துறைமுகத்தில் மூழ்கியிருக்கலாம் என பொலிஸார் யூகித்துள்ளனர். ஆனால் அவரது உடல் இதுவரை கிடைக்கவில்லை.
இதேவேளை கடந்த வாரம், லண்டனில் உள்ள சோமாலிய மாஃபியாவிடம் டேவிஸ் கணிசமான கடன்களை அடைத்துவிட்டதாக Catalan செய்தித்தாளான La Vanguardia கூறியது.
லெவி டேவிஸ் காணாமல் போய் மூன்று மாதங்கள் ஆவதால் இன்னும் அவரது விடயத்தில் மர்மம் நீடிப்பதாக கூறப்படுகின்றது.