புறக்கோட்டையில் போலி ஆவணங்களைத் தயாரித்து காணி உரிமையாளர்கள் மிரட்டல்: தீவிர விசாரணை
புறக்காட்டையில் போலியான ஆவணங்களைத் தயாரித்து காணி உரிமையாளர்கள் மிரட்டப்பட்டு கப்பம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புறக்கோட்டை பகுதியில் பல கோடி ரூபாய் பெறுமதியான காணிகள்மற்றும் கட்டிடங்களுக்கு போலி ஆவணங்களைத் தயாரிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்றுக்காள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கப்பம் பெறல் சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் உட்பட திட்டமிட்ட குற்றக் கும்பலுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறிப்பிட்ட காணிகள் மற்றும் கட்டிடங்களுக்கு போலியான உறுதிகளைத் தயாரித்து, உரிமையாளர்களுக்கு எதிராக சிவில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படும் சட்டத்தரணி ஒருவரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி தொழிலதிபர் அடங்கிய இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல், கடந்த 2017 ஆம் ஆண்டு புறக்கோட்டையில் உள்ள நிலம் ஒன்றிற்கு போலி ஆவணங்களைத் தயாரித்து உரிமை கோரியுள்ளதுடன், அதனை விலைக்கு வாங்கிய தொழிலதிபரை அச்சுறுத்தி, வழக்குகளில் இருந்து விலகுவதற்கு கப்பப் பணம் கேட்டுள்ளது.
கப்பப் பணம் தராவிட்டால் சிவில் வழக்குத் தொடர்வதாகவும், அந்த நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை நிறுத்துவதாகவும் தொழிலதிபர் மிரட்டியுள்ளார்.
இந்த மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக, நிலத்தை வாங்கிய தொழிலதிபருக்கு அங்கு கட்டப்பட்ட கட்டிடப் பணிகளை முடிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.
இந்த பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளுப்பிட்டி தொழிலதிபர் மற்றும் அவரது கும்பல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க குற்றப் புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலங்களுக்கு போலி ஆவணங்களைத் தயாரிக்க உதவிய நொத்தாரிஸ் அதிகாரி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதே சட்டத்தரணி என்பது தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது, கொள்ளுப்பிட்டி தொழிலதிபர் தன்னையும் ஏமாற்றி, இந்த போலி ஆவணங்களைத் தயாரிக்கும் பணிக்கு தனது உதவியைப் பெற்றதாக அந்தச் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். குறித்த சட்டத்தரணியிடம் எதிர்வரும் நாட்களில் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.