முடங்கவுள்ள இரு முக்கிய அரச துறைகள்
தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து அரச துறை ஊழியர்களின் இரு முக்கிய குழுக்கள் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
இதன்படி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை 10ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்றை நடத்தவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கை
மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், மருத்துவர்களுக்கான வெற்றிடங்களை நிவர்த்தி செய்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கையை மீளாய்வு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மருத்துவர்களுக்கான வரிச்சலுகை வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டமை, அதிகரிக்கப்பட்ட வரிகள் மற்றும் 2025ஆம் ஆண்டின் அரச ஊழியர் சம்பளத் திருத்தத்தின் கீழ் மேலதிக நேர மற்றும் விடுமுறை கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பங்கு இடைநிறுத்தப்பட்டமை ஆகியவை மருத்துவர்களுக்கு மேலதிக நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக GMOA தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் கீழ் தற்போது 25,000க்கும் குறைவான மருத்துவர்களே சேவையில் உள்ளனர்.
அத்துடன், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுகாதாரத் துறையின் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கை விஞ்ஞான ரீதியாக மீளாய்வு செய்யப்படவில்லை என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுகயீன விடுமுறைப் போராட்டம்
இந்த நிலையில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (நவம்பர் 09) நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தம்மிக்க முனசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு பலமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
திட்டமிட்டபடி இன்று சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.