புதிய அரச பணியாளர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு
இலங்கையில் பல ஆண்டுகளாக தேர்வு செய்யப்படாததால் முடங்கியிருந்த அரசாங்க பணியிடங்களுக்கு புதிதாக 1,21,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ஆசிரியர்கள் 23,000 பேர் உட்பட பல்கலைக்கழக மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களும் இதில் அடங்குவர் என ஜனாதிபதி கூறினார்.
அரச பணியாளர் நியமனம்
கொழும்பு பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

“இந்த முறை ஆட்சேர்ப்பு நடவடிக்கை என்பது குறிப்பிட்ட பணி மற்றும் வேலைவாய்ப்பு இருப்பதை உறுதிப்படுத்திய பின்னரே மேற்கொள்ளப்படும்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச சேவையின் அத்தியாவசிய கொடுப்பனவுகள் பலவற்றை 100 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பளம் உயர்வு
நிபுணத்துவ அறிவும் தொழில்நுட்பத் திறமையும் கொண்டவர்களை அரசு சேவைக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கு பழைய சம்பள முறைகளில் இருந்து நாம் வெளியே வர வேண்டும்.

அரச சேவையின் அடிப்படை சம்பளங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அத்துடன், ஜனவரி மாதத்தில் அடுத்த சம்பளம் உயர்வு கிடைக்கும்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குவது தனியார் துறையாகும். நாங்கள் தனியார் துறையின் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தியுள்ளோம்.
வருமான வரி வரம்பு ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திலும் அந்த வரம்பினை குறிப்பிட்டளவு அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.