அச்சுறுத்தும் நடவடிக்கை தொடருமாயின் நீதிமன்றை நாடுவோம்! இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம்
ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் நெடுந்தீவு பாடசாலைகளுக்கு விஜயம் சென்றமை தொடர்பாக அச்சுறுத்தும் வகையிலான கடிதங்கள் தொடருமாயின் நீதிமன்றத்தை நாடுவோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகண கல்வி பணிப்பாளருக்கு எழுத்த மூலமான கடிதத்தை அனுப்பி உளளது.
குறித்த கடிதத்தில் மேலும், இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் ஜோசப் ஸ்டாலின் தலமையில் நெடுந்தீவுப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அறிந்துகொள்ள அண்மையில் விஜயத்தை மேற்கொண்டனர் இலங்கை ஆசிரியர் சங்கம் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமாகும்.
(பதிவு இல. 984) தங்களின் 2026.09.09 ம் திகதிய NP/20/Edu.Adm/Inq/2026 இலக்க கடிதம் மூலமாக "இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளின் நெடுந்தீவுக் கோட்ட பாடசாலைகளுக்கான விஜயம் தொடர்பாக" தலைப்பிடப்பட்டு வலயக் கல்விப் பணிப்பாளர், தீவகம் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட தங்களின் கடிதம் மூலம், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தொழிற்சங்க உறுப்பினர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் தாங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்.
வன்மையான கண்டனம்
தங்களின் குறித்த அச்சுறுத்தும் செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. 1935 ஆம் ஆண்டின் 14ம் இலக்க கட்டளைச் சட்டம் மற்றும் 1948 ம் ஆண்டின் 15 ஆம் இலக்க கட்டளை சட்டம், 1958 இன் 18 வது பிரிவு, 1970 இன் 24 ம் இலக்க சட்டம் என்பனவற்றின் மூலம் தொழிற்சங்கங்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் வடமாகாண கல்விப் பணிப்பாளராகிய தங்களின் செயற்பாடுகள் தொழிற்சங்க சட்டத்தின் பிரிவுகள் 26 மற்றும் 27 இன் அடிப்படைகளை மீறியுள்ளது.
அதாவது : 26. ஒரு தொழிற்சங்க உறுப்பினர் ஒரு தரப்பாக உள்ள ஒரு தொழில் தகராறை முன்னிட்டு அல்லது அதனை முன்னெடுத்துச் செல்லும் வகையில் செய்யப்பட்ட எந்தவொரு செயலுக்காகவும், அத்தகைய செயல் வேறொரு நபரை வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை மீறத் தூண்டுகிறது என்ற ஒரே காரணத்திற்காகவோ, அல்லது அது வேறொரு நபரின் வர்த்தகம், தொழில் அல்லது வேலைவாய்ப்பில் தலையிடுகிறது என்ற காரணத்திற்காகவோ, அல்லது வேறொரு நபர் தனது மூலதனம் அல்லது உழைப்பைத் தன் விருப்பப்படி பயன்படுத்தும் உரிமையில் தலையிடுகிறது என்ற காரணத்திற்காகவோ, பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு தொழிற்சங்கத்திற்கோ அல்லது அதன் அலுவலர் அல்லது உறுப்பினருக்கோ எதிராக எந்தவொரு உரிமையியல் நீதிமன்றத்திலும் எந்தவொரு நடவடிக்கையோ அல்லது பிற சட்ட நடவடிக்கையோ தொடர இயலாது.

27. ஒரு தொழில் தகராறை முன்னிட்டு அல்லது அதனை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தொழிற்சங்கத்தால் அல்லது அதன் சார்பாக ஏதேனும் முறைகேடான செயல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒரு தொழிற்சங்கத்திற்கு எதிராகவோ அல்லது அதன் உறுப்பினர்கள் அல்லது அலுவலர்கள் சார்பாகவும் மற்றும் தொழிற்சங்கத்தின் மற்ற அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும் தொடரப்படும் வழக்கை எந்த நீதிமன்றமும் விசாரிக்காது.
வடமாகாண கல்வியமைச்சும் வடமாகாண கல்வித்திணைக்களமும் நெடுந்தீவு போன்ற கடல்கடந்த பிரதேசங்களில் மிகவும் சிரமத்துடன் பணியாற்றும் அதிபர் ஆசிரியர்களின் பிரச்சினைகள் குறித்து, கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்காமல், அங்குள்ள அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்து வந்திருந்தீர்கள்.
இடர் கொடுப்பனவு வழங்கும் தீர்மானம்
அங்குள்ள பல பாடசாலைகளில் சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றிவரும் அதிபர், ஆசிரியர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய கஸ்ட மற்றும் அதிகஸ்ட பிரதேச கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு உடந்தையாக இருந்துள்ளீர்கள்.
எமது தொழிற்சங்கம் கள விஜயம் செய்து ஊடகங்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்திய பின்னரே கடற்போக்குவரத்தின் ஆபத்துக்களுடன் கடல்கடந்த தீவுகளில் பணியாற்றும் அதிபர், ஆசிரியர்களுள் சிலருக்கு மட்டும் இடர் கொடுப்பனவை கூட வழங்க தீர்மானித்திருந்தீர்கள்.
கடற்போக்குவரத்து சீரின்மை மற்றும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக கடல் கடந்த தீவுகளில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள போதும் மாணவர்களின் போசாக்கு கருதி வழங்கப்படும் உணவு வழங்கும் நிதி ஒதுக்கீடுகளில் எவ்வித அதிகரிப்பையும் வழங்காமல் மாணவர்களின் போசாக்கு நிலை குறித்தும் அக்கறையற்றவர்களாக அசமந்தமாகவே இன்றும் செயற்பட்டு வருகின்றீர்கள்.
இவ்வாறு தாங்கள் உள்ளிட்ட வடமாகாண கல்வி அதிகாரிகளினது மோசமான செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுவரும் பாடசாலைகளுக்கு களவிஜயம் செய்து, அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களை வெளிக்கொண்டு வந்திருந்த நிலையில், நெடுந்தீவு கோட்ட பாடசாலையின் அதிபர்களையும், நெடுந்தீவு பாடசாலைகளுக்கு களவிஜயம் செய்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கடமையாற்றும் பாடசாலைகளின் அதிபர்களையும் அச்சுறுத்தும் வகையிலான தங்களின் செயற்பாடுகள், ஜனநாயக விரோதமானதும் ஏதேச்சதிகாரம் நிறைந்ததும் சட்ட விரோதமானதும் அச்சுறுத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டதுமாகும்.
தங்களின் குறித்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடருமாயின், தொழிற்சங்கங்களை சட்ட நடவடிக்கைகளுக்கு செல்வது தவிர்க்கமுடியாததாக அமையும் என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டுவருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.