கொட்டகலை பகுதியில் பொறியில் சிக்கியிருந்த சிறுத்தை உயிருடன் மீட்பு
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் மிருகங்களை வேட்டையாடும் ஒருவரால் வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கியிருந்த சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை இன்று(06.08.2026) நுவரெலியா வனவிலங்கு அலுவலக அதிகாரிகளும், ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலையின் கால்நடை வைத்தியரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
கடந்த (05) ஆம் திகதி மாலை 5மணியளவில் சிறுத்தை ஒன்று பொறியில் சிக்கியிருப்பதை தோட்டத் தொழிலாளர்கள் கண்டு, தோட்ட முகாமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தோட்ட முகாமையாளர் நுவரெலியா வனவிலங்கு அலுவலகத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்தியுள்ளார்.
நான்கு வயது சிறுத்தை மீட்பு
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கால்நடை வைத்தியர்கள், “ தற்போது விதிமுறைப்படி வேலை செய்யும்” தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையிலும், மனிதநேய அடிப்படையில் ரந்தெனிகலையிலிருந்து வருகை தந்து, பொறியில் சிக்கிய சிறுத்தையை மயக்கமடையச் செய்து மீட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட சிறுத்தை சுமார் 4 வயதுடைய பெண் சிறுத்தை என்றும், சிறுத்தையின் அடிவயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் இரண்டு கம்பிகளாலான பொறிகள் இறுக்கியதில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மீட்கப்பட்ட சிறுத்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது தங்களது வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருவதாக வைத்தியர் அகலங்க பிணிதிய மேலும் தெரிவித்துள்ளார்.