சவூதியில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்.. அனோஜனுக்காக சென்ற அதிகாரிகள் சிக்கலில்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கான சட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்ய அங்கு சென்றிருந்த இலங்கை தூதுக்குழுவினர், விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் ரியாத்தில் சிக்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அஸார்ட் நவாவி (PC) தலைமையிலான இந்த நான்கு பேர் கொண்ட குழுவினர், மேல்முறையீடு தொடர்பான ஆவணங்களை இறுதி செய்த பின்னர் நேற்று இலங்கை திரும்பவிருந்தனர்.
இருப்பினும், ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து ரியாத் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டதால், இக்குழுவினர் அங்கு சிக்கிக்கொண்டுள்ளனர்.
இடைநிறுத்தப்பட்ட விமான சேவை
இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை ரியாத்திற்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.

இக்குழுவினர் தரைவழியாக அண்டை நாட்டிற்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் இலங்கை திரும்புவது குறித்து பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், பயண தூரம் மிக அதிகமாக இருப்பதால் அந்த யோசனை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், அனைத்து ஆவணப் பணிகளும் நிறைவடைந்து விட்டதாகவும், கருணை மனு சாதகமான பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று நம்புவதாகவும் நவாவி ரியாத்திலிருந்து குறிப்பிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ரியாத் விமான நிலைய தாக்குதல்
இந்த மனுவை ஒக்டோபர் 14 ஆம் திகதிக்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும்.

மனுவைத் தாக்கல் செய்வதற்கான செலவு சுமார் 6.6 மில்லியன் ரூபாயாக இருக்கும் என்றும், இச்செயல்முறைக்காக ஏற்கனவே சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தனிப்பட்ட சட்ட விவகாரங்களுக்கு அரசு வழக்கமாக நிதியுதவி அளிப்பதில்லை என்றாலும், இது ஒரு சிறப்பு வழக்கு என்பதால் அரசாங்கம் இதில் தலையிட்டுள்ளதாக அவர் கூறினார்.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத், வியாழக்கிழமையன்று ரியாத்திலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தம்மாம் மத்திய சிறைச்சாலையில் சிவராசா அனோஜனை சந்தித்துள்ளார்.
பரபரப்பாகும் சவூதி விமான நிலைய தாக்குதல்! 12 பேர் பலி - பலரின் நிலைமை கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள்