யாழில் 48 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் இதுவரை 48 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தமை, விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தமை, பொதிகளில் உள்ள சுட்டுத் துண்டுகளில் திரிவுகளையும், மாற்றங்களையும் செய்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், போலி தயாரிப்புகள் மற்றும் எஸ். எல். எஸ் (SLS) குறியீடற்ற தரமற்ற பொருட்களை விற்பனை செய்தமை மின்சார மற்றும் இலத்திரனியல் சாதனங்களுக்கு உத்தரவாத சீட்டு (Warranty card) வழங்கப்படாமல் விற்பனை செய்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சட்ட நடவடிக்கை
இந்தக் காலப் பகுதியில் எரிவாயுவுக்கு (GAS) போலியான தட்டுப்பாட்டை ஏற்படுத்துதல், பதுக்குதல் போன்ற செயற்பாடுகள் இடம் பெறுவதால் அது தொடர்பில் பொதுமக்கள் ஏதேனும் அசெளகரியங்கள் ஏற்படின் 021-221-9001 என்ற மாவட்ட பாவனையாளர் அலுவலகங்கள் அதிகார சபைக்கு முறைப்பாட்டினை வழங்க முடியும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும், தவறிழைக்கும் வியாபாரிகளுக்கு எதிராக தொடர்ந்தும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை பொதுமக்களும் பாவனைகளும் பொருட்களை கொள்வனவு செய்யும்போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு அரசாங்க அதிபர் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.