இலங்கையை உலுக்கிய பேரழிவின் பின்னணியிலுள்ள மர்மம் - அடுத்தடுத்து உயிராபத்துக்கள் ஏற்படும் அபாயம்
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் காரணமாக மலையகம் வரலாறு காணாத பாரிய அழிவுக்கு உள்ளாகி உள்ளது. இதன் பின்னணியில் பல மர்மங்கள் மறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புயலுடன் பெய்த கனமழை காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல நகரங்கள் மூழ்கியதுடன், பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டன.
இதன் காரணமாக பலர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர். இன்று வரையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வருகின்றனர்.
நிலவும் மர்மம் என்ன..
இவ்வாறான நிலையில் மலையகத்தில் ஏற்பட்ட பாதிப்பின் பின்னணிக்கு மண்சரிவு மட்டும் தானா காரணம் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இவ்வாறான இழப்புகள் ஏற்படுமா என எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற கடந்த 27ஆம் திகதி பாரிய சத்தம் கேட்டதன் பின்னர் அனர்த்த நிலைமை ஏற்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாரிய பூகம்பம் ஒன்று ஏற்பட்டதன் பின்விளைவே இதுவென்றும், திட்டமிட்ட வகையில் அது மறைக்கப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.
எனினும் அனர்த்த நிலைமையின் பின்னர் வெளியான காணொளிகள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் அதற்கான சாத்தியம் உள்ளதாகவே பலரும் தெரிவிக்கின்றன.
வீடுகள், வாழ்விடங்கள், பாரிய வீதிகள் பிளவுபட்டு காணப்பட்டமையே இதற்கான காரணமாக தெரிவிக்கின்றன.
பொதுவாக மண்சரிவு, வெள்ள நிலைமை ஏற்பட்டால், மேல்மட்ட மண் கழுவிச் செல்லும், நீர் வடிந்தோடும் பாதைகளில் சேதம் ஏற்படும், வீதி ஓரங்களில் அரிப்பு ஏற்படும், மழை குறைந்து வெள்ளம் வடிந்ததும் நிலைமை ஓரளவு ஸ்த்திர நிலையை அடையும்.
எனினும் பேரிடர் ஏற்பட்டு பல வாரங்கள் கடந்துள்ள போதும், அங்கு தொடர்ந்தும் ஆபத்தான நிலைமை காணப்படுகிறது. மக்கள் அங்கு செல்ல முடியாத நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் மலையகப் பகுதியில் நிலம் நீளவாக்கில் பிளந்து காணப்படுகிறது.
பெரிய பாறைகள் ஒரே கட்டமாக உடைந்து நகர்தல், முன்பு இல்லாத இடங்களில் புதிய நீரோடைகள், வீதிகள், பாலங்கள், ஆற்றுப்பாதைகள் அடித்தள நிலை இழத்தல் என்பனவும் வீதிகள் அகலமாகவும் ஆழமாகவும் வெடித்துள்ளன.
இவ்வாறான நிலையில் மலையகத்தில் மக்கள் தொடர்ந்தும் வாழ்வது பெரும் ஆபத்தான நிலையாகவே மாறியுள்ளது. நிலக்கீழ் ஏற்பட்ட பாரிய வெடிப்பின் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

நீர் மண்ணின் ஆழ்மட்ட அடுக்குகளுக்குள் ஊடுருவி வெளியேற வழியின்றி அழுத்தம் அதிகரித்து விட்டதனால் மண் தனது பிடிப்புத்தன்மையை இழந்து, பாறை - மண் அடுக்குகளுக்கு இடையிலான உராய்வு குறைந்திருக்கின்றது.
இதன் காரணமாக நில சரிவுகள் ஏற்பட்டு பாரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இது குறித்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இந்தத் தகவல்களை வெளியிடவில்லை. எனினும் ஏதோவொரு மர்மம் நிலவுவதாக சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக சர்வதேச ஆய்வாளர்களை கொண்டு வந்து, நிலைமை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய பிரான்ஸ், இத்தாலி, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த துறைசார் நிபுணர்கள் இலங்கைக்கு வந்து சம்பவ இடங்களை ஆய்வு செய்யவுள்ளனர்.
முதற்கட்டமாக ட்ரோன் அமைப்பின் மூலம் நிலைமை ஆராயப்படவுள்ளது. சேதமடைந்த மற்றும் விரிசல் அடைந்த மலைச் சரிவுகளுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்க பொறியியல் முறைகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இந்த ஆய்வுகள் மூலம் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மண் சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படம் எடுக்கப்படவுள்ளதுடன், பெறப்பட்ட படங்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் நடத்தப்படும்.
கண்டி, மாத்தளை, பதுளை, நுவரெலியா, குருநாகல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அதன் அச்சுறுத்தல், கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன, அவை வெளிநாட்டு நிபுணர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
