மஹிந்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்காது எனது வீட்டில் துண்டித்தது ஏன் என கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்து நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நிலுவையை காரணம் காட்டி ஏன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என நபர் ஓருவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீராக்கெட்டிய இல்லத்தில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் திருமண விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தத் தவறியமை தொர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விடயம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசம்பர் 04-ஆம் திகதி விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இம்மனு ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது கருத்துக்களைக் கவனத்திற் கொண்ட நீதிபதிகள் அமர்வு, இலங்கை மின்சார சபை (CEB) தற்போது மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருவதால், அதற்குப் பதிலாக உருவாகியுள்ள பதிலீட்டு நிறுவனத்தை இம்மனுவின் எதிர்மனுதாரராகச் சேர்ப்பதற்கு மனுதாரர் தரப்பிற்கு அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 04-ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சட்டத்தரணி விஜித குமார என்பவரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண விழா 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 முதல் 15 வரை மஹிந்த ராஜபக்ஷவின் வீராக்கெட்டிய இல்லத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கு ரூபா சுமார் 26.8 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட வேண்டியிருந்தது.
செப்டம்பர் 12 முதல் 15 வரை வீராக்கெட்டிய இல்லம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பாதுகாப்பு விளக்குகள் வழங்குமாறு அப்போதைய மின்சக்தி அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமைய மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், அதற்கான கட்டணத்தை ராஜபக்ச குடும்பத்தினர் செலுத்துவார்கள் எனக் கூறப்பட்ட போதிலும், நீண்டகாலமாக அத்தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது.
எதிர்மனுதாரர்கள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இலவசமாக மின்சாரத்தைப் பெற்றுக்கொண்டதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.
சாதாரண குடிமகன் தனது வீட்டில் ரூபா 7,390 மாதக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காக உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபாய் நிலுவை வைத்திருந்த வீராக்கெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்கத் தவறியது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சார சபையின் இந்த பாரபட்சமான செயல்பாடு, அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என அறிவிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, மறைந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், நாமல் ராஜபக்ஷவின் திருமண விழாவிற்கான நிலுவையில் இருந்த மின்சாரக் கட்டணத்தைத் தாம் செலுத்திவிட்டதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam