இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள்
இராமநாதபுரம் - மானாங்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 1 கோடி 80 இலட்சம் ரூபா மதிப்பிலான 5 இலட்சத்து 70 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகளை திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (26.07.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை இந்திய பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தீவிர சோதனை
திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பாளருக்கு இராமநாதபுரம் - புதுமடம், அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து போதைப்பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக மானாங்குடி கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது வலி நிவாரணி மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, அந்த பெட்டிகளை மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து ஆய்வு செய்தபோது ஒரு பெட்டியில் 57ஆயிரம் மாத்திரைகள் வீதம் 10 பெட்டிகளிலும் 5 இலட்சத்து 70ஆயிரம் மாத்திரைகள் இருந்தமை கணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மதிப்பு
இதற்கமைய, குறித்த பெட்டிகள், சரக்கு வாகனம் மூலமாக இராமநாதபுரம் சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் எடுத்து செல்லப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகி உள்ளதால் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளின் மதிப்பு சுமார் 1 கோடியே 80 இலட்சம் என்றும் சர்வதேச மதிப்பு மூன்று கோடி ரூபா இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |