கனேடிய மக்களுக்கு இரங்கல் வெளியிட்ட இலங்கை அரசாங்கம்
கனடாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வ இரங்கல் வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசு மற்றும் மக்களின் சார்பில் ‘X’ (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் ஆழ்ந்த அனுதாபச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் இலங்கை ஒற்றுமையாக நிற்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகுந்த சோகநேரத்தில் உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பரந்த சமூகத்தினருடன் இலங்கையின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இழப்பை சமாளிக்கும் இக்கடினமான நேரத்தில் வலிமை, ஆறுதல் மற்றும் அமைதி பெறுவார்கள் என நம்புவதாக அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.