கொழும்பு - பதுளை வீதியில் சரிந்து விழுந்த மண்மேடுகள்: பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல்வேறு பிரதேசங்களுக்கான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
இதற்கமைய நேற்று(09.10.2023) இரவு ஹப்புத்தளை பெரகல மற்றும் கொழும்பு - பதுளை பிரதான வீதிக்கு இடைப்பட்ட உடா பிளாக்வுட் பகுதியில் இரண்டு இடங்களில் பெரிய அளவிலான பாறைகள் சரிந்து விழுந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக பாதையில் செல்வதற்கான போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
செங்குத்தான சரிவு
வீதியின் ஒருபக்கம் செங்குத்தான சரிவுகளைக் கொண்டிருப்பதாலும், நீரில் மூழ்கக்கூடும் என்பதாலும் ஒற்றையடிப் பாதையில் கனரக வாகனங்களை செலுத்துவது ஆபத்தானது எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால், வாகன சாரதிகளை அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு ஹப்புத்தளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.