11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்!
இலங்கையில் பல மாவட்டங்களுக்கு இன்றும்(22.10.2025) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நிலவும் சீரற்ற காலநிலையால் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாப தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது நேற்று முதல் இன்று வரை 24 மணிநேரத்துக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, கண்டி, களுத்துறை, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வடக்கு கடற்கரைக்கு அருகில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வளர்ச்சியடைந்து வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(22.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும், இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.




