நுவரெலியாவில் நடைபாதை இன்மையால் ஏணியில் பயணம் செய்யும் மக்கள்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேர் பயணிப்பதற்காக படிக்கட்டு இல்லாமல் ஏணிகளில் பயணம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அபாயகரமான நிலை
இதன்படி, ஹட்டன் பிரதான வீதியை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அப்பகுதி மக்களின் நடைப்பாதை முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் பயணிப்பதற்கு படிக்கட்டுக்கள் இல்லாமல் அதற்கு பதிலாக இரண்டு ஏணிகளை பயன்படுத்தி வருகின்றதாக தெரியவருகிறது.

பாதுகாப்பற்ற இந்த நடைபாதை காரணமாக குறித்த பகுதியில் உள்ள மக்களின் தினசரி வாழ்க்கையை பாதிக்கப்படுவதாகவும், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் குறித்த ஏணியில் ஏறி பயணிப்பது ஆபத்தானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள இரும்பு ஏணி, மழைக் காலங்களில் வழுக்கும் அபாயம் கொண்டுள்ளது, யாராவது தவறி கீழே விழுந்தால் உயிர்சேதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதிகாரிகளின் அசமந்தம்
எதிர்வரும் நாட்களில் மழை பெய்தால் இந்த பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, மண் மற்றும் கற்பாறைகள் இடிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பலமுறை முறைபாடு செய்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பாதுகாப்பாக வீடுகளுக்கு பயணம் செய்வதற்கு பாதைகள் அமைத்து தரும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியோரத்தில் பிளக்பூல் ரூவான் எலிய சில்வர் போல் ஹோட்டல் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்துமையும் குறிப்பிடத்தக்கது.